சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட வரைபட அனுமதி வழங்க, ரூ. 35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கட்டிட ஆய்வாளர் மற்றும் ஏஜென்டாக செயல்பட்டவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது மகள் சுஜன்யா பெயரில் புதியதாக வீடு கட்டுவதற்காக, கட்டிட வரைபட அனுமதி பெற, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பம் மீதான பரிசீலனைகள் முடிந்த பிறகும், கட்டிட அனுமதி சான்று தராமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கட்டிட அனுமதி வழங்க வேண்டுமானால், ரூ.35 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று, நகராட்சி கட்டிட ஆய்வாளர் பெரியசாமி, நாகராஜிடம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத நாகராஜ், இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் அளித்தார்.
நகராட்சி கட்டிட ஆய்வாளர் பெரியசாமியை, கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், நேற்று, ரசாயனம் தடவிய ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகளை நாகராஜிடம் கொடுத்து அனுப்பினர். பணத்துடன் நகராட்சி அலுவலகம் வந்த நாகராஜிடம், அங்கு இருந்த பொறியாளர் தினேஷ் என்பவரிடம் பணத்தை கொடுக்குமாறு பெரியசாமி கூறியுள்ளார்.
அவர் பணத்தைப் பெற்று, அதனை கட்டிட ஆய்வாளர் பெரியசாமியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரேகா தலைமையிலான போலீஸார், பெரியசாமியையும், ஏஜென்டாக செயல்பட்ட தினேஷையும் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் வைத்து, அவர்களிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரேகா கூறும்போது, “இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளோம், கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்டு உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அதன் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம்” என்றார்.