நாடு முழுவதும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 39 தொகுதிகளுக்கு 57 பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் முதல் கட்டமாக 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் முடிவுற்றது. இந்த நிலையில் ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதை அடுத்து, வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் 57 தேர்தல் பொது பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
குறிப்பாக, தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளதால் கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் மூன்று பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.