புதுக்கோட்டை அருகே பெண்கள் மட்டுமே தேர் இழுக்கும் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பல ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முத்துமாரி அம்மனுக்கு ஒரு தேரும், பிள்ளையாருக்கு ஒரு தேரும் என இரண்டு தேர்கள் இழுக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சப்பர வடிவத்தில் உள்ள தேரில் பேச்சியம்மன் சிலையை வைத்து, அந்த தேரை முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இழுத்து வரும் வைபவம் நடைபெற்றது.
தேரோட்டத் திருவிழாவிலும் மறுநாள் நடைபெறும் தீர்த்த திருவிழாவிலும் இதுபோல் பேச்சியம்மன் தேரை பெண்கள் மட்டுமே மகிழ்ச்சியுடன் இழுத்து திருவீதி உலா நடத்துகிறார்கள். சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த தேரோட்ட நிகழ்வு நடைபெறுகிறது. இரண்டு தேர்களை ஆண்களும், பெண்களும் இழுத்து வந்தாலும், பேச்சியம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவது புதுக்கோட்டை மாவட்டத்தில் இங்கு மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது.
இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளும் வகையில் அனைவரும் மேள தாளங்களுக்கு ஏற்ப நடனமாடியது பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டதோடு, அன்னதானமும் வழங்கப்பட்டது.