சென்னையிலிருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்து : 15 பேர் படுகாயம்

சென்னையில் இருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற மினி பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீத் (54). இவர் நேற்று இரவு 12 மணியளவில் மினி பேருந்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், ஒகேனக்கலுக்கு சுற்றுலா புறப்பட்டார். பேருந்தில் 13 பெண்கள் உட்பட 21 பேர் இருந்தனர். பேருந்தை, திருவள்ளூர் மாவட்டம் அத்தியால்பேட்டையைச் சேர்ந்த கரீம் உல்லா (48) என்பவர் ஓட்டி வந்தார்.

சென்னை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி அருகே வரும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பர்கூர், கந்திகுப்பம் போலீஸார், அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்த 21 பேரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சாகுல் ஹமீத் (54), மொய்தீன் அப்துல் காதர் (53), மர்ஜியா (48), குர்ஷித் (48), நஜீம் மணிஷா (50), ஜலாலுதீன் (65), ஜெரின் (45), அப்ரோஸ் (19), பர்ஜானா (30), பிர்தோஸ் (23), ரஷீதா (45), தௌபீக் (16), நாசீலாமக்ரம் (17), சித்திக் பாத்திமா (45), பல்கீஸ் (15) உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 6 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கந்திகுப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.