கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 1-ந் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, ஜூன் 1-ந் தேதிவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் அளித்து, கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் ஜூன் 2-ந் தேதி சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறியது. அதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

இடைக்கால ஜாமீன் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஜாமீனை நீட்டிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- “நான் 7 கிலோ உடல் எடை குறைந்து விட்டேன். எனது சர்க்கரை அளவு தொடர்பான ‘கீடோன்’ அளவு அதிகரித்து விட்டது. அது, கடுமையான நோய்வாய்ப்படுதலுக்கு அறிகுறி ஆகும். எனவே, பெட்-சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே, எனக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டு கோடைகால நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவாலின் மனுவை நிராகரித்தனர். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது, ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிகள் அமர்வு தான் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இடைக்கால ஜாமீன் கோரும் மனுவை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யவும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ள நிலையில், வரும் 2ம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.