தெலங்கானா மாநிலத்தில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்யும் நோக்கில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார் தலைமை ஆசிரியரான சூர்யநாராயணா. அவர் குறித்த செய்தி தனியார் ஆங்கில நாளிதழில் வெளியாகி உள்ளது.
அந்த மாநிலத்தின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சூர்யநாராயணா பணியாற்றி வருகிறார். வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்யும் வகையிலான யோசனையில் அவர் இருந்துள்ளார்.
அப்போது தான் பி.டெக் பயின்று வரும் அவரது மகள் மூலமாக ஏஐ பயன்பாடு குறித்து அறிந்துள்ளார். அதன் பிறகு விர்ச்சுவல் உருவில் ‘ஏஐ அவதார்’ ஒன்றுக்கு உயிர் கொடுத்துள்ளார். அதன் மூலம் தனது பள்ளியின் சிறப்பு அம்சங்களை அனைவரிடமும் கொண்டு சொல்வது தான் அவரது திட்டம்.
“அரசுப் பள்ளியில் பயில்வதன் மூலம் கிடைக்கும் சாதகங்களை சுட்டிக்காட்டும் வகையில் இதனை முன்னெடுத்துள்ளோம். இந்த ஏஐ அவதார், தெலுங்கு மொழியில் பேசும். ஆங்கில வழிக் கல்வி, சிறந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல், மதிய உணவு, இலவச பாடப் புத்தகம், இரண்டு சீருடைகள், டிஜிட்டல் வழிக் கல்வி மற்றும் பல என பள்ளியின் அம்சங்களை தனது உரையில் இந்த ஏஐ அவதார் குறிப்பிடும்.
வரும் கல்வி ஆண்டுக்கு அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். கடந்த கல்வி ஆண்டில் எஸ்எஸ்சி தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எங்கள் பள்ளி பெற்றிருந்தது” என தலைமை ஆசிரியர் சூர்யநாராயணா தெரிவித்தார்.