தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு : தினக்கூலியாக ரூ.600 வழங்க ஒப்பந்தம்

தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.600 வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே இன்று நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் டி.சந்திரமேனன், செயலாளர் ஜி.விஜயசேகர், பொருளாளர் எம்.எஸ்.பி.தேன்ராஜ் மற்றும் சிஐடியு உப்புத் தொழிலாளர் சங்கம், ஏஐடியுசி ஜில்லா உப்பு தொழிலாளர் சங்கம், ஐஎன்டியுசி தமிழ்நாடு தேசிய உப்பு தொழிலாளர் சம்மேளனம், வேப்பலோடை வட்டார உப்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மாவட்ட அண்ணா உப்பு தொழிலாளர் சங்கம், தூத்துக்குடி வட்டார உப்பு வார்முதல் தொழிலாளர் சங்கம், இந்திய தேசிய உப்புத் தொழிலாளர்கள் ஐக்கிய சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் உப்புவார் முதல் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியத்தை ரூ.600 ஆகவும், உப்பு வார்முதல் இல்லாத பிற பணிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை ரூ.590 ஆகவும் உயர்த்தி வழங்க ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். மேலும், இந்த ஒப்பந்தம் 30.04.2024 முதல் 29.04.2026 வரை இரண்டு ஆண்டுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.