அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை : ஜூன் 1-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

ஜூன் 1ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், மக்களவை வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முன்னதாக, திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, ஜூன்-4 அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் வருகிற ஜூன் 1-ம் தேதி சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில், காணொலி வாயிலாக நடைபெறும்.

இக்கூட்டத்தில் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஜூன் 1ம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல் ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதற்கடுத்த நாள் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்த மூன்று விஷயங்கள் தொடர்பாகவும் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், வாக்கு எண்ணிக்கையின்போது திமுக முகவர்கள் செயல்பட வேண்டிய விதம் தொடர்பாகவும் தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.