கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு இந்தியா கூட்டணி அரசு முடிவு கட்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ருத்ராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர். ஒரு பக்கம் இந்தியா கூட்டணியும் அரசியல் சாசனமும் இருக்கிறது. மற்றொரு பக்கத்தில் அரசியல் சாசனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் சாசனத்தை ஒழிப்போம் என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். உங்கள் அரசாங்கம் வராது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க இந்தியா கூட்டணி தனது உயிரை பணயம் வைக்கும். ஆனால், அரசியல் சாசனம் ஒழிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்காது.
நாம் எல்லோரும் தாய் – தந்தைக்குப் பிறந்தவர்கள். ஆனால், தான் தாய் – தந்தைக்குப் பிறக்கவில்லை என்றும், பரமாத்மா தன்னை அனுப்பி இருக்கிறார் என்றும் நரேந்திர மோடி கூறுகிறார். அதானிக்கும் அம்பானிக்கும் உதவத்தான் கடவுள் அவரை அனுப்பி இருக்கிறாரா? விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகளுக்கு உதவ அனுப்பவில்லையா? உண்மையில் கடவுள் அவரை அனுப்பியிருந்தால், நாட்டின் பலவீனமான மக்களுக்கு உதவுங்கள் என்றுதான் அவர் சொல்லியிருப்பார். அப்படியானால் அவர் என்ன மாதிரியான கடவுளாக இருப்பார்? அவர் மோடியின் கடவுள்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு முடிவு கட்டும். அதேபோல், ராணுவத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள அக்னி வீரர் திட்டத்தையும் இந்தியா கூட்டணி முடிவுக்குக் கொண்டு வரும். அந்தத் திட்டத்தை நாங்கள் கிழித்து குப்பைத் தொட்டிக்குள் வீசுவோம்.
ஜூன் 4-க்கு பிறகு பாஜகவுக்கும், நரேந்திர மோடி-க்கும் குட் பை சொல்லுவோம். பொதுமக்களை ஏமாற்றும் போலி பக்கிரிக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்தியா கூட்டணி அதிரடியாக வாக்குகளைப் பெற்று வருகிறது. பாஜகவிடம் இருந்து விரைவில் நாடு விடுதலை பெறும். நாட்டுக்கு உண்மையான நல்ல நாட்கள் வரப்போகின்றன” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க இந்தியா கூட்டணி திட்டமிடுகிறது என்றும், மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது என்றும் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருகிறார். இந்நிலையில், 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்குவோம் என ராகுல் காந்தி கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.