போக்குவரத்து ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு சந்தேகங்களுக்கு விளக்கம் : தொமுச கோரிக்கை

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என தொமுச வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஓய்வூதிய நிதி நம்பகத்துக்கு தொமுச பொருளாளர் கி.நடராஜன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

இதற்காக முன்பணம், வட்டி, வரி (ஜிஎஸ்டி) என ரூ.7054 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பணத்துக்கான வட்டி, வரி செலுத்த வேண்டும் என்பது சரியானதல்ல. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். காப்பீடு தொடர்பான விருப்புரிமை கடிதம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மருத்துவ காப்பீட்டு திட்டத் தொகை எவ்வளவு? தகுதி வாய்ந்த சிகிச்சைக்குரிய நோய்கள் யாவை? 2022-ம் ஆண்டு ஜூலை முதல் 2026-ம் ஆண்டு ஜூன் வரை திட்டம் நடைமுறையில் இருக்கும் என்றால் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதா? அப்படியென்றால் 2022 ஜூன் முதல் இன்றைய தேதி வரையிலான மருத்துவத் தொகை அளிக்கப்படுமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும். அவ்வாறு விளக்கமளிக்க முடியாத நிலையில் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சிக்கல்கள் உருவாகும் என்பதை கவனத்துக்கு கொண்டு வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.