“செங்கோலை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்” – ஆளுநர் ரவி பதிவு

“செங்கோலை மீட்டெடுத்ததை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. செங்கோலை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் திறந்தபோது அங்கு தமிழகத்தின் செங்கோலை நிறுவியது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜ் பவன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை மீட்டெடுத்து நிறுவியதன் முதலாம் ஆண்டு நிறைவை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது.

நமது சுதந்திரத்துக்கு வழிவகுத்த அதிகாரப் பரிமாற்றத்தின் வெளிப்படையான கருவியாக விளங்கிய செங்கோலின் புண்ணிய பூமியும் அதன் பிறப்பிடமான தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கும் இது சிறப்புப் பெருமைக்குரிய நாள். தமிழர் பெருமையின் இந்த அடையாளத்தை வேண்டுமென்றே நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்வதிலிருந்து மீட்டு, அதை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று சாவர்க்கர் பிறந்தநாளை ஒட்டி, ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்தப் புகைப்படத்தை ராஜ் பவன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்திரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர்.

எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர். அவரது தியாகங்கள், ஒன்றுபட்ட, வளர்ந்த மற்றும் வலிமையான பாரதத்தை அதன் பாரம்பரிய பெருமிதத்துடன் கட்டியெழுப்ப அனைத்து இந்தியர்களையும் ஊக்குவிக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.