அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி, புகழ் பெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோயிலில் இன்று மூலவருக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடந்தது.
அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி துவங்கி இன்றுடன் முடிவடைகிறது. பல்வேறு மாவட்டங்களில் செஞ்சுரி அடித்த கோடை வெப்பம் கடந்த ஒரு வாரமாக தணிந்து கோடை மழை பெய்து குளிர்ந்த காற்று வீசி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
புதுச்சேரியில் அதிக அளவு மழை இல்லை என்றாலும் தட்பவெட்ப நிலை மாறி குளிர்ந்த காற்று வீசியது. இந்த நிலையில் அருள்மிகு மணக்குள விநாயகர் கோயிலில் உள்ள மூலவருக்கு ஆண்டுதோறும் கோயில் நிர்வாகம் சார்பில் அக்னி நட்சத்திரம் நிறைவடையும் சமயத்தில் 1008 இளநீர் அபிஷேகம் செய்வது வழக்கம். பொதுமக்களை நோய் நொடிகளில் இருந்து காப்பாற்ற இந்த அபிஷேகம் நடத்துவதாக ஐதீகம்.
அதுபோல் இந்த ஆண்டு இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைவதால் மூலவருக்கு இன்று காலை 10:30 மணியளவில் 1008 இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் இந்த இளநீர் அபிஷேகத்தை கண்டு களித்தனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே பலர் தங்களால் முடிந்த இளநீரை வாங்கி அபிஷேகத்துக்காகக் கொடுத்தனர்.
அதேபோன்று உற்சவமூர்த்திக்கு 108 இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் கோயில் சிறப்பு அதிகாரி பழனியப்பன், தலைமை குருக்கள் கணேஷ் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.