புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் முழுமையாக அமல் : சீருடையில் மாற்றமில்லை

சிபிஎஸ்இ பாடத்திட்டம் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் முழுமையாக அமலாகிறது. சீருடையில் மாற்றமில்லை. ஜூன் 6-ல் பாடப்புத்தகம், நோட்டு விநியோகிக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர பாடத்திட்டமும் அமலில் இருந்தது. தற்போது புதுவையில் நான்கு பிராந்தியங்களிலும் நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கி 29-ம் தேதி வரை நடந்தது. ஆனால், அப்போது மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கவில்லை. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு பாடப் புத்தகம், சீருடை வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மொத்தம் 77 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்காக ரூ.3.18 கோடி செலவில் 7 லட்சத்து 50 ஆயிரம் சிபிஎஸ்இ பாடநூல்கள் வாங்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 12 ஆயிரம் மாணவர்களுக்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் புத்தகம் வாங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ரூ.3.53 கோடியில் மாணவர்களுக்கு தலா 2 செட் சீருடை வாங்கவும், ரூ.2.92 கோடி தையல் கூலி வழங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்வித் துறை மூலமாக அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகம், சீருடை அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி நம்மிடம் கூறுகையில், ”ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகம், சீருடை, நோட்டுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். சீருடையில் இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யவில்லை” என்றார்.