சவுக்கு சங்கர் வழக்கு : நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த இருவர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கடிதம்

சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாம் எனக் கூறி, இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

நீதி பரிபாலனத்தில் தலையிடும் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதால், அந்த இரு நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘நீதிபதி சுவாமிநாதன், அந்த நபர்கள் யார் என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்தாததால், அவர்களையும், அவர்களை அனுப்பியது யார் என்பதையும் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பி இருக்கிறார் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்.