முல்லை பெரியாற்றில் புதிய அணை : கேரள அரசை கண்டித்து தேனியில் விவசாயிகள் கண்டனப் பேரணி

முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில் ”முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் ஆயிரக் கணக்கான மக்கள், வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, தற்போதுள்ள அணைக்கு 1,200 அடிக்குக் கீழே புதிய அணையை கட்டிய பின், பழைய அணையை இடிக்க அனுமதி வேண்டும். புதிய அணை கட்டும் போதும், கட்டிமுடிக்கப்பட்ட பின்னும், தமிழகத்திற்கான தண்ணீர் பகிர்வு தற்போதைய ஏற்பாட்டின்படி தடையின்றி தொடர்ந்து செயல்படும்” என சொல்லப்பட்டது.

இந்த மனுவை ஆய்வு செய்த அமைச்சகம், அதை நிபுணர் மதிப்பீட்டு குழுவுக்கு மே 14ம் தேதியில் அனுப்பியது. இது தொடர்பான கூட்டத்தை மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழு வரும் 28ம் தேதி நடத்த உள்ளது. இந்நிலையில், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் இன்று காலை தமிழக எல்லையான லோயர் கேம்பில் இருந்து முல்லை பெரியாறு அணை நோக்கி பேரணியாக கிளம்பினர். ஆனால், விவசாயிகள் கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே வந்த போது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எப்படியாவது முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு இடுக்கி அணைக்கு தண்ணீரை கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்று கேரளா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் நியமித்த இந்தியாவின் தலை சிறந்த நிபுணர்கள் குழு அணையில் 13 கட்ட ஆய்வுகள் நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பே 142 அடி தண்ணீர் தேக்கிக்கொள்ள தீர்ப்பு அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை வழங்கிய பிறகும் இதனை கேரள அரசு ஏற்க மறுக்கிறது.

தற்போது அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வரும் வேளையில், கேரளா புது அணை என்பதில் பிடிவாதமாக இருப்பது 152 அடிக்கு முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான். முல்லை பெரியாறு அணையை இடிக்க நினைக்கும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்காது” என்றார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், முல்லைச் சாரல் விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டன.