“நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் நிலை மோசமாக இருந்தது” – ஆளுநர் ரவி

தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததாக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டினார்.

நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை, தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். ஆளுநரின் செயலாளர் கிரிலோஸ் குமார் வரவேற்றார். மாநாட்டில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி “2021-ம் ஆண்டு நான் ஆளுநராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்சினைகள் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அவைகளின் தரமும் குறைந்து காணப்பட்டது. இது எனக்கு ஏமாற்றம் அளித்தது. இதனை சரி செய்து, ஒன்றிணைக்கவே துணை வேந்தர்கள் மாநாடு மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கை தான் நமது எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்துக்கு தயாராக உள்ளது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின்தங்கி உள்ளோம். சுதந்திரத்துக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியில் 5-ம் இடத்தில் இருந்த நாம், 11-ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டோம். தற்போது 5ம் இடத்துக்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3 இடத்துக்கு முன்னேற உள்ளோம்.

தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன் நம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால், அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதில்காலம் கேள்விகுறியாகிவிடும்.

நாம் சுதந்திரத்துக்கு முன்பு உலகின் பெரும் பொருளதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம். இதற்குக் காரணம், அப்போது பின்பற்றப்பட்ட கல்விக் கொள்கையாகும். திருவள்ளுவர் கற்பித்தல் குறித்து கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தப் பாடுபட வேண்டும். கற்கும் முறையில் பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்” என்றார்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 35 துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.