பரமாத்மாதான் (கடவுள்தான்) தன்னை அனுப்பி இருக்கிறார் என்ற கதையை நரேந்திர மோடி கூறி இருப்பதற்கு காரணம் இருக்கிறது என்றும், தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத் துறை எழுப்பும் கேள்விக்கு பரமாத்மாவை காரணம் காட்டவே அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்றும் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
பிஹாரின் பாலிகஞ்ச்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பரமாத்மா கதையை நரேந்திர மோடி ஏன் ஆரம்பித்தார் தெரியுமா? தேர்தலுக்குப் பிறகு அதானி பற்றி அமலாக்கத் துறை கேள்வி கேட்டால், ‘எனக்குத் தெரியாது, கடவுள் இதை என்னிடம் சொன்னார்’ என்று நரேந்திர மோடி சொல்வார்.
நரேந்திர மோடி அவர்களே, நீண்ட உரைகளை ஆற்றாதீர்கள். பிஹார் இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்? 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாகச் சொன்னீர்கள். ஆனால் யாருக்கும் வேலை கொடுக்கவில்லை. கடந்த காலங்களில் இளைஞர்கள் ராணுவம் மற்றும் பொதுத்துறை பணிகளுக்குச் செல்ல முடிந்தது. ஆனால், நரேந்திர மோடி அனைத்து வழிகளையும் மூடிவிட்டார்.
இந்தியா கூட்டணியின் அரசு ஜூன் 4-ஆம் தேதி வருகிறது. ஆட்சி அமைந்தவுடன் அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இந்த திட்டத்தை ராணுவம் கொண்டு வரவில்லை. ராணுவத்தின் மீது இந்த திட்டத்தை நரேந்திர மோடி திணித்துள்ளார்.
அரசியல் சாசனத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் இது. ஏனென்றால் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அரசியலமைப்பை யாரும் தொட முடியாது என்பதை நரேந்திர மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் சாசனத்தை யாரேனும் மாற்றத் துணிந்தால், ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் அவர் முன் நிற்கும்.
பெரும் பணக்காரர்களுக்குச் சாதகமாகவே நரேந்திர மோடி செயல்பட்டுள்ளார். அந்த பெரும் பணக்காரர்கள், அந்தப் பணத்தைக் கொண்டு வெளிநாடுகளில் வியாபாரம் செய்தார்கள். அதனால், நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. நாம் ஏழைகளுக்குப் பணத்தைக் கொடுக்கும்போது, அந்தப் பணத்தை அவர்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் செலவிடுவார்கள். பொருட்களின் தேவை அதிகரிக்கும். மூடப்பட்ட தொழிற்சாலைகளும் செயல்படத் தொடங்கும். இந்திய இளைஞர்களுக்கு அதே தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நாட்டில் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் மாறுகிறார்களே என்று நரேந்திர மோடியிடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நரேந்திர மோடி யோசித்துவிட்டு பதில் சொல்கிறார் – நான் அனைவரையும் ஏழையாக்க வேண்டுமா?
இதுதான் நரேந்திர மோடியின் சிந்தனை. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏழைகளுக்கு நரேந்திர மோடி எதுவும் செய்யவில்லை. நரேந்திர மோடி 22 பெரும் பணக்காரர்களை உருவாக்கியுள்ளார். நாங்கள் கோடிக்கணக்கான கோடீஸ்வரர்களை உருவாக்கப் போகிறோம். இந்திய அரசு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாயை நாட்டின் ஏழைப் பெண்களின் கணக்கில் டெபாசிட் செய்யும்” என்று கூறினார்.
கடந்த வாரம் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது தாய் உயிரோடு இருந்தவரை தனது பிறப்பும் பயோலாஜிக்கலானது என்றே தான் கருதி வந்ததாகவும், தாயின் மறைவுக்குப் பிறகு தனக்கு நேர்ந்த பல அனுபவங்களை இணைத்துப் பார்க்கும்போது, கடவுள்தான் தன்னை அனுப்பி இருக்கிறார் என்பது புரிந்தது என்றும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.