பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் 5 பேர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ சார்பில் கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரித்து வந்த நிலையில், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கை தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக 5 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்கள் 5 பேரும் தலை மறைவாக இருப்பதால், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் அவர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால், என்ஐஏ அதிகாரிகள், அவர்கள் 5 பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர். இவர்கள் குறித்த தகவல் தெரிவித்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இருந்த போதும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித தகவலும் கிடைக்காததால் கடந்த ஆண்டு அந்தத் தொகையை தலா 5 லட்சம் என மொத்தம் 25 லட்சமாக உயர்த்தி என்ஐஏ அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹசன் என்ற அந்த 5 பேர் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது கோவை மாநகரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக, ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.