தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது, என்று போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, சீட் பெல்ட் அணியாதது, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது, அதிக பயணிகளை ஏற்றியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, அரசுப் பேருந்துகளுக்கு பல இடங்களில் தமிழக போலீஸார் அபராதம் விதிக்கத் தொடங்கினர். இதனால், இந்த விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.
சட்ட ரீதியாக போக்குவரத்து மற்றும் காவல் துறை இடையே நடந்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. காவல் துறை மற்றும் போக்குவரத்து துறையினர் இடையே நிலவும் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த ஆலோசனைக்குப் பிறகு, இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறப்படுகிறது.