கொடைக்கானலில் களை கட்டிய படகு போட்டி : சுற்றுலா பயணிகள் பரவசம்

கொடைக்கானலில் நடைபெற்ற படகு போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு படகுகளை ஓட்டி மகிழ்ந்தனர்.

கோடைகாலங்களில் சுற்றுலா வருபவர்களை உற்சாகப்படுத்துவதற்காக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கோடை விழாக்கள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இதில் மலர் கண்காட்சிகள், படகுப் போட்டிகள், பழம், காய்கறி ஆகியவற்றின் கண்காட்சிகள், சர்வதேச செல்லப்பிராணிகள் போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி 61வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை தினந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 21ம் தேதி கொடைக்கானலில் நட்சத்திர ஏரியில் படகு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் இந்த போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொடைக்கானலில் மழை குறைந்து இதமான வானிலை நிலவி வருவதால், இன்று நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற படகு போட்டி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டி முடிவில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹில்மா, போதி சித்தார்த், இரட்டையர் ஆண்கள் பிரிவில் ஸ்ரீதர், வசந்தன், இரட்டையர் பெண்கள் பிரிவில் நிவேதிதா, காவியா ஆதித்யா ஆகியோர் வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோட்டாட்சியர் சிவராமன் பரிசுகளை வழங்கினார். இந்த போட்டிகளை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.