ஹரியாணாவில் மினி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் மினி பேருந்து ஒன்றில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு யாத்திரை புறப்பட்டனர். அம்பாலா-டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இவர்கள் சென்ற மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி ஒன்று பேருந்து மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக அம்பாலா கன்டோன்மென்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஓட்டுநரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விபத்தில் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.