“6-ம் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு 15 இடங்கள் கூட கிடைக்க வாய்ப்பில்லை” – விசிக எம்.பி. ரவிக்குமார் கணிப்பு

‘5 கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்து 6-ம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் சனிக்கிழமை நடக்கிறது. இதில் பாஜகவுக்கு 15 இடங்கள் கூட கிடைக்க வாய்ப்பில்லை’ என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கூறியுள்ளார்.

விழுப்புரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தனக்கு பிரச்சாரம் செய்த புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமியை விசிக எம்.பி. ரவிக்குமார் இன்று சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ரவிக்குமார் கூறியது: “மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகிறது. 5 கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்து 6-ம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் நாளை நடக்க இருக்கிறது. இதில் பாஜகவுக்கு 15 இடங்கள் கூட கிடைக்க வாய்ப்பில்லை. கடந்த முறை டெல்லி, ஹரியாணா மாநிலங்களில் முழுமையாக வெற்றி பெற்ற பாஜகவுக்கு இந்த முறை ஒன்றிரண்டு இடங்கள்கூட கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

உத்தரப் பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகவே, அடுத்த 2 கட்ட வாக்குப்பதிவும் ஆட்சி மாற்றத்தை நோக்கியே செல்லும். ஒவ்வொரு நாளும் பிரதமர் தெளிவில்லாமல் பேசி வருகிறார். தன்னை ஒரு கடவுள் அவதாரம் என்று சொல்லும் அளவுக்கு பிரதமர் பிதற்ற ஆரம்பித்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் ஒவ்வொரு நாள் பேச்சும் பாஜகவுக்கு ஒவ்வொரு தொகுதியை இழக்கச் செய்கிறது. பாஜகவின் வெற்றிக்கு காரணமான நரேந்திர மோடியே அக்கட்சியின் தோல்விக்கும் காரணமாகிவிட்டார்” என்றார்.

தொடர்ந்து பேசிய நாராயணசாமி, “வட மாநிலங்களில் இந்தியா கூட்டணியின் அலை வீச தொடங்கிவிட்டது. காரணம், கடந்து 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த திட்டங்கள் குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை. அடுத்து வரும் ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்தும் மக்களிடம் பேசவில்லை. மாறாக, காங்கிரஸ் கட்சி தலைவர்களையும், இந்தியா கூட்டணி தலைவர்களையும் தரக்குறைவாக பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

மதத்தின் பெயரால் அரசியல் செய்வதற்கு அவர்கள் முயற்சித்தார்கள். ராமர் கோயிலை முன்வைத்தார்கள் அது எடுபடவில்லை. இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் பிரிக்கும் வேலையை பார்த்தார்கள். அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கொள்கையை பற்றி பேசாமல் தடம்புரண்டு பிரதமர் பேசுகிறார்.

இந்தியா கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 30 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி பெறும். ராகுல் காந்திதான் பிரதமர் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். இதேபோல் நேரம் வரும்போது மற்றவர்களும் கூறுவார்கள். என்னைப் பொறுத்தவரை ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது தான் விருப்பம்” என்றார்.