மாவோயிஸ்ட்டுகளின் கோட்டைக்குள் புகுந்த பாதுகாப்பு படை : 7 பேர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 7 மாவோயிஸ்ட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர்-பிஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பஸ்தார், நராயண்பூர், தண்டேவாடா ஆகிய மாவட்டங்களின் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பஸ்தார் சிறப்பு அதிரடி படையினர் மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது திடீரென மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதற்குப் பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது தண்டேவாடா அதிரடிப்படையினர் 5 மாவோயிஸ்ட்டுகளின் உடல்களையும், நாராயண்பூர் அதிரடிப்படையினர் 2 மாவோயிஸ்ட்டுகளின் உடல்களையும் கைப்பற்றினர் அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்தத் துப்பாக்கிச் சண்டையில் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) வீரரும் காயமடைந்தார்.

சத்தீஸ்கரில் பஸ்தார், தண்டேவாடா, சுக்மா, பிஜாப்பூர், கொண்டகான் மற்றும் நாராயண்பூர் ஆகிய மாவட்டங்கள் தான் மாவோயிஸ்ட்டுகள் அதிக அளவு உள்ளனர். அந்த பகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.