‘பாஜக தனித்து பெற்ற வாக்குகள் நாம் தமிழரை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்து விடுகிறேன்’ என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முல்லை பெரியாற்றில் புதிய அணையை கேரள அரசு கட்டக்கூடாது. அணை பலவீனமாக இருக்கிறதெனில் இரு மாநில அரசுகளின் ஒப்புதலோடு, நிதி பங்கீட்டுடன் அணைக்குள் ஓர் அணை கட்டலாமே?. அதை விடுத்து ஏன் இடித்து கட்ட வேண்டும்? எனவே, முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணைக்கட்டுவதை ஏற்க முடியாது.
பிரதமர் மோடி ராமர், ராமர் என்று சொல்லிப் பார்த்தார். எடுபடவில்லை. எனவே, தற்போது தன்னையே ராமர் என்று சொல்லிவிட்டார். அவர் கோயில் கட்டவில்லை. தனக்காக வீடு கட்டிக் கொண்டார். ஒடிசாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரையில் தமிழர் ஒருவர் முதல்வராக வருவது குறித்து சர்சைக்குரிய விதமாக பேசியிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தை பஞ்சாபி தான் ஆள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். ஆனால், தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும் என்று சொன்னால் மட்டும் விமர்சிக்கின்றனர். இதையெல்லாம் ஏப்ரல் 19-க்கு முன்பாக இவர்கள் பேசியிருக்க வேண்டும்.
என் மண் என் மக்கள், என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடந்தாரே, இப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு அவர் என்ன சொல்லப் போகிறார்? ஒரு தமிழராக அவரது நிலைப்பாடு என்ன? தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என அண்ணாமலை கூறியிருக்கிறார். முதலில் அவர் தனித்து நின்று போட்டியிட்டு காட்டட்டும். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு கூட்டணியின்றி பாஜக தனித்து பெற்ற வாக்குகள், நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இருந்தது என்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு சென்றுவிடுகிறேன். அதன்பின் பெரிய கட்சி யார் என்பது தெரிந்துவிடும்” என்று சீமான் கூறினார்.