தவறான குற்றச்சாட்டுகள் வாக்குப்பதிவை பாதிக்கும் : தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வாதம்

வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தவறான குற்றச்சாட்டுகள் வாக்குப்பதிவை பாதிக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் தெரிவிப்பது மக்கள் வாக்களிக்க வருவதை குறைத்துவிடும் என்றும் வழக்கு ஒன்றின் வாதத்தில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஏடிஆர், காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் 2 அமைப்புகளும் புதிதாக ஒரு மனுவை சமீபத்தில் தாக்கல் செய்தன. அதில், “தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்த்து, 48 மணி நேரத்துக்குள் இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், “இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது. ஏனென்றால், ஒவ்வொரு முறையும் இப்படியான சந்தேகங்களை தேர்தல் ஆணையத்தின் மீது எழுப்பும்போது, மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சிதைவதை பார்க்கிறோம்.

இந்த மக்களவை தேர்தலில்கூட வாக்கு சதவீதம் குறைவதற்கு இந்த மாதிரியான மனுக்கள் மிக முக்கிய காரணமாக அமைகின்றன. இந்த மாதிரியான மனுக்கள் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் மக்கள் வாக்குசாவடிகளுக்கு வருவதற்கு தயங்குகிறார்கள்.” என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மனுதாரர் சார்பில் இதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அப்போது, “சந்தேகங்களை தீர்ப்பதற்கே நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நேரடியாக தேர்தல் ஆணையத்துக்கு செல்லாததற்கு காரணமும் அதுதான். தேர்தல் ஆணையம் எங்கள் சந்தேகங்களை இப்படி கொச்சைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு பேசிய நீதிபதிகள், “6ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது. அதனால், தேர்தல் முடிந்தபின் இந்த வழக்கு விசாரணை செய்யப்படும். கோடை விடுமுறை முடிந்தபின் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.” என்று கூறி ஒத்திவைத்தனர்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், “தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி 17சி படிவம், கட்சிகளின் முகவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதன்படி, பூத்வாரியாக அந்தந்த கட்சிகளின் முகவர்களுக்கு 17சி படிவத்தின் நகல் வழங்கப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு, பாதுகாப்பு அறையில் (ஸ்டிராங் ரூம்) அசல் படிவங்கள் பத்திரமாக வைக்கப்படுகின்றன. 17சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய சட்டவிதிகளின் படி கட்டாயம் இல்லை.

தவிர, வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை வெளியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும். அதாவது, முதல்கட்டமாக வெளியிடப்படும் வாக்குப்பதிவு விவரங்களும், 2-ம் கட்டமாக தபால் வாக்குகளுடன் சேர்த்து வெளியிடப்படும் வாக்குப்பதிவு விவரங்களும் வேறுபடும். இந்த சூழலில், 17சி படிவத்தை பொதுவில் வெளியிட்டால் மக்களிடம் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்.

மேலும், சமூகவிரோத சிந்தனை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவார்கள். போலி பிரதிகளை உருவாக்கி பிரச்சினையை உருவாக்குவார்கள். தேர்தலின்போது குறைந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி – தோல்வி நிர்ணயிக்கப்படுவது இயல்பானது. அதற்காக 17சி படிவத்தை வெளியிட்டால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.