“மோடியின் அலுவலக ஊழியராக தேர்தல் ஆணையம் செயல்பட்டு இருந்தால் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் எவ்வாறு திமுக, காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க முடியும்?” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வருகை புரிந்து அவருக்கு சங்கர மடம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பின், காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து இருவரும் 15 நிமிடம் தனிமையில் உரையாடினர். அதன்பின் எல்.முருகனுக்கு, சங்கர மடம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மிகப்பெரிய வெற்றிய பெறும். மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பார்.
தேர்தல் ஆணையம் மோடியின் அலுவலக பணியாளர் போல் செயல்படுவதாக இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு. அப்படி மோடியின் சார்பாக செயல்பட்டிருந்தால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் எப்படி திமுக மற்றும் காங்கிரஸ் ஜெயித்திருக்க முடியும். அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறது” என்றார்.