புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குளங்களை, மாவட்ட நிர்வாகம் சார்பில், தூர்வாரும் பணி மற்றும் குளக்கரைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, இன்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது; தமிழக அரசானது பொதுமக்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மாவட்டம்தோறும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி நன்மை தரும் மரங்களை நடவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சிப் பகுதிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் 20.05.2024 அன்று நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குளங்களை தூர்வாரும் பணி மற்றும் குளக்கரைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி 22.05.2024 அன்று பார்வையிடப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகையான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. அந்தவகையில், இந்த வளாகத்தினுள் வளர்ந்துள்ள கருவேல மரங்கள், முட்புதற்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, 20.05.2024 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டத்தின் நடவடிக்கைகளின்படி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), உதவி வேளாண்மை அலுவலர், வனச்சரக அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட வட்டார அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், முதற்கட்டமாக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு கிராம ஊராட்சி வீதம் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 13 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அவ்வூராட்சிகளில் தனிநபர் மற்றும் பொது இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுவதும் அகற்றிடவும், அகற்றப்பட்ட பொது இடங்களில் நிழல் தரும்பலன் தரும் உள்ளுர் மரங்களை நடவு செய்து பராமரித்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில், சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சீமைக்கருவேல மரங்கள் அகற்றிடும் பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே புதுக்கோட்டை மாவட்டம் சீமைக்கருவேல மரங்கள் இல்லா மாவட்டமாக மாற்றிட தொடர்புடைய துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், உதவி இயக்குநர் (கனிமங்கள்) லலிதா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.