குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை தொடங்கும் பழக்கண்காட்சி வருகிற 26-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நாளை தொடங்குகிறது. பழ கண்காட்சியையொட்டி ஏற்கனவே 3 லட்சத்து 14 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது அவை அனைத்தும் பூத்துக் குலுங்கி வருகின்றன. சால்வியா, குட்டி ரக மேரி கோல்ட், மேரி கோல்ட், டேலியா உள்ளிட்ட பல்வேறு வகை மலர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராக உள்ளது. மேலும் இந்த முறை பூங்கா நுழைவாயில் இருந்து மினி படகு இல்லம் வரை மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி மாளிகையிலும் அரிய வகை மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பழ கண்காட்சியில் ஐந்து டன் எடையிலான ஆன பல்வேறு ரகங்களில் பழங்கள் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மூலிகை வகை பழங்கள் மட்டுமல்லாமல், அடர்ந்த வனப் பகுதியில் கிடைக்கும் மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழங்களும் கண்காட்சியில் இடம் பெற உள்ளது. சிம்ஸ் பூங்கா தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் 150 கிலோ எடையில் பல்வேறு வகை பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
குன்னூரில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து பழ கண் காட்சிக்கு உண்டான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நாளை காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கி பழ கண்காட்சியை திறந்து வைக்கிறார். நாளை தொடங்கும் பழக்கண்காட்சி வருகிற 26-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. கண்காட்சி காரணமாக மினி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்படுகிறது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.