வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, திருச்செந்தூரில் வசந்த விழாவாக கடந்த 13-ம் தேதி தொடங்கியது. விழாவின் 10-ம் நாளான இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10:30 மணியளவில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுகின்றன.
தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர், தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் கிரிவீதி வலம் வருகிறார். அத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இன்று அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். விழாவையொட்டி, போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.