ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்ததாகக் கூறப்படும் நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம், ஜனவரி 31ம் தேதி ஹேமந்த் சோரனை கைது செய்தது. இதை எதிர்த்தும், 2024 மக்களவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளவும் இடைக்கால ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. ஹேமந்த் சோரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அப்போது, “ஹேமந்த் சோரன் பணமோசடி செய்ததற்கான முதன்மை ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை நீதிமன்றம் ஒப்புக்கொண்டுவிட்ட பிறகு, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எவ்வாறு அவர் செல்லாது என கூற முடியும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“ஹேமந்த் சோரன் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோதே, அவரது நடத்தை கறைபடிந்ததாக இருந்தது. ஹேமந்த் சோரனிடம் இருந்து நேர்மையான கருத்து வெளிவரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் உண்மைகளை மறைத்துவிட்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பணமோசடி வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்றார். ஆனால், அவரது வழக்கும் ஹேமந்த் சோரனின் வழக்கும் நிறைய வித்தியாசங்களைக் கொண்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் கோரவில்லை. மேலும், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அவருக்கு எதிராக எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லை. இதற்கு நேர்மாறாக, ஜார்கண்ட் விசாரணை நீதிமன்றம், ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது. எனவே, ஹேமந்த் சோரனின் மனுவை ஏற்க முடியாது” என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஹேமந்த் சோரன் திரும்பப் பெற்றார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை, நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்தது. கைது செய்யப்படுவதற்கு முன்பாக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார்.