பொள்ளாச்சி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு : ஆஞ்சநேயர் கோயில் செல்ல பக்தர்களுக்கு தடை

ஆழியாறு வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் நா.மூ.சுங்கம் அருகே சண்முகபுரம் பாலாற்றங்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி மற்றும் அர்த்தநாரிப்பாளையம் வனப்பகுதியில் பெய்து வரும் கோடை மழையால் நீரோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

இந்நிலையில் நேற்று ஆழியாறு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் இன்று பாலாற்றின் நடுவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கோயிலுக்கு செல்லும் தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. பாதுகாப்பு கருதி இன்று கோயில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆற்றின் கரையில் சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர். ஆற்றில் வெள்ளம் குறைந்த பின், நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.