கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சால் சர்ச்சை

கடவுள் பூமியில் அவருடைய பணிகளை முடிக்க என்னை அனுப்பியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்தாம் கட்டத் தேர்தல் நிறைவடைந்துள்ளன. இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவு உள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுகள் சர்ச்சையாகவும், பேசுபொருளாகவும் மாறி வருகின்றன.

தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன் சாதாரண மனிதனே அல்ல, கடவுளின் குழந்தை என்று பிரதமர் மோடி பேசிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் சோர்வடையாமல் தொடர்ந்து எப்படி பணியாற்றுகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பிரதமர் மோடி, “நான் எனது அம்மா இறக்கும் வரை என்னை சாதாரண ஒரு மனிதனாக தான் நினைத்தேன். ஆனால் அவர் இறந்த பிறகு என் வாழ்க்கையில் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் இணைத்து பார்க்கும் போது நான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை என புரிந்தது. கடவுள் பூமியில் அவருடைய பணிகளை முடிக்க என்னை அனுப்பியுள்ளார் என்பதை முழுமையாக நம்புகிறேன்.

இந்த பதவி, புகழ் எல்லாம் அவர் கொடுத்தது தான். அதனால் தான் நான் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலை பெற்றுள்ளேன் என நம்புகிறேன். நான் சொல்வதற்கு பல்வேறு விமர்சனங்கள் வரலாம். ஆனால், நான் உணர்ந்தவற்றை சொல்கிறேன். நான் கடவுளின் கருவி மட்டும் தான். அவர் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறாரோ அதை என் மூலம் செய்கிறார். நான் கடவுளை இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. பிறரைப் போல நானும் கடவுள் நம்பிக்கை கொண்டு வழிபட்டு வருகிறேன்” என்றார்.

தன்னைக் கடவுளாக உருவகப்படுத்திக் கொண்ட பிரதமர் மோடி, தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன பேசப்போகிறாரோ என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். அத்துடன் அவரது பேட்டி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.