உதகையில் இந்து அறநிலையத்துறை அதிகாரி தங்கிய விடுதியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

இந்து சமய அறநிலையத் துறை நில அளவை ஆய்வாளரான பாஸ்கர் உதகையில் தங்கியுள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் இரண்டு மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆரப்பாக்கம் மேட்டுக்காலனி ஊராட்சியை சேர்ந்த பாஸ்கர், (50) இந்து சமய அறநிலையத் துறையில் நில அளவை ஆய்வாளராக உதகையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது, நீலகிரி மாவட்டம் குன்னூரில் பணிபுரிந்து வருகிறார். உதகை ஏ.டி.சி., சாலையில் உள்ள தங்கும் விடுதியில் மாத வாடகை அடிப்படையில் தங்கியுள்ளார்.

பாஸ்கரன், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ஆவடி பகுதிகளில் பணிபுரிந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் இன்று பாஸ்கரனின் சொந்த ஊரான ஆரப்பாக்கம் மேட்டுகாலனி வீட்டில் சோதனை நடத்தினர்.

அதே போல் உதகையில் அவர் தங்கியுள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி-யான ஜெயகுமார் தலைமையில் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனை மேற்கொண்டு சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.