பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கருக்கா வினோத்துக்கு நெருக்கமான 37 வயதான பெண்ணின் வீட்டில் என்ஐஏ சோதனையிடும் போது கண்டெடுத்த ஆவணங்களின் அடிப்படையில் அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும், மேலும் பலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மாநில பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கு என்ஐஏ தகவல் அளித்தது.
இந்த வழக்கின் விசாரணையில், அந்த பெண் தன் மகளின் பள்ளித் தோழிகளிடம் நெருங்கிப் பழகி, நடனம் கற்றுத்தருவதாகவும், அழகுக் கலை கற்றுத் தருவதாகவும் ஆசை காட்டி அந்த குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சீரழித்த அவலம் வெளிப்பட்டது. குறிப்பாக, ஐதராபாத், கோவை போன்ற நகரங்களுக்கு அந்த பெண்களை அழைத்துச் சென்று கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது.
மேலும், அந்தக் குழந்தைகளின் குடும்ப நிலைமையை தெரிந்து கொண்டு பண ஆசை காட்டியும், மறுத்தால் ஏற்கெனவே ரகசியமாக எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை பொது வெளியில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுவரை 7 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறு குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இந்த கொடூர குற்றம் மன்னிக்க முடியாதது.
அந்த நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவசரகதியான உலகத்தில், பொருளீட்டும் நிர்ப்பந்தத்தில் இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள் என அறிந்து கொள்ளாமலும், எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளாமலும், அவர்களின் எதிர்காலத்தை தொலைத்து கொண்டிருப்பது பெரும் துயரம்” என தெரிவித்துள்ளார்.