லஞ்ச ஒழிப்பு சோதனை : விழுப்புரம் பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

விழுப்புரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.80 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஊழல் தடுப்புப்பிரிவு சட்டத்தின் கீழ் விழுப்புரம் இணை சார்பதிவாளர் தையல் நாயகி உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் திரு.வி.கா சாலையில் பத்திரப்பதிவு இணை சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. விழுப்புரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள், நகரப் பகுதிகளுக்கான பத்திர பதிவுகள் இங்கு நடைபெறும். தினமும் இங்கு குறைந்தபட்சம் 50 பத்திரப்பதிவுகள் நடைபெறும். இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசு நிர்ணயிக்கப்ட்ட கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.

இதனையடுத்து நேற்று இரவு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீஸ் படையினர் விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். வந்தவர்கள் அலுவலகத்தின் முன்பக்க கதவுகளை மூடிவிட்டு சோதனையில் ஈடுபட்டனர். காலையிலிருந்து எத்தனை பத்திர பதிவுகள் நடைபெற்றன. அதற்கான கட்டணங்கள் குறித்து கணக்கு வரவுகளை சேகரித்தனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ 1.80 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஊழல் தடுப்புப்பிரிவு சட்டத்தின் கீழ் விழுப்புரம் இணை சார்பதிவாளர் தையல் நாயகி உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, நெய்வேலியில் உள்ள இணை சார்பதிவாளர் தையல் நாயகியின் வீட்டில் இன்று காலை முதல் கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள்.