“நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம் சூட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தேமுதிக உள்ளிட்ட ஒருசில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. எனினும், கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தங்கள் பக்கம் வருவதற்கு அதிமுக முயன்றது. அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அது தொடர்பாக மறைமுகமாக பேசியது குறிப்பிடத்தக்கது. எனினும், அதிமுக – காங்கிரஸ் கூட்டணி அமையவில்லை. மாறாக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற ஒருசில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது அதிமுக.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டி பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தின்போது மக்களுடன் எளிமையாக பழகும் வீடியோவை பகிர்ந்து, அதற்கு மேற்கோளாக “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என்று பதிவிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
செல்லூர் ராஜு திடீரென ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டியுள்ளது புரியாத புதிராக உள்ளது. அதிமுக தலைமை இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிற நிலையில், செல்லூர் ராஜு திடீரென ராகுல் காந்தியை பாராட்டியிருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது.