ராஜீவ் காந்தி நினைவு தினம் : ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸார் அஞ்சலி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அப்போது நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூரில் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ராஜீவ் நினைவிடத்தில் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியையும் காங்கிரஸ் கட்சியினர் எடுத்துக் கொண்டனர். காங்கிரஸ் பிரமுகர்கள் ராஜீவ் காந்தி நினைவாக ரத்த தானமும் செய்தனர். இதுபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை அனுசரித்தனர்.