புனேவில் மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவர் உயிரிழப்புக்குக் காரணமான 17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்தச் சிறுவனுகு சமூக சேவை, போதை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
புனேவில் நேற்று அதிகாலை Porsche கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். அந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். அவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து சிறார்களுக்கான நீதிமன்றத்தில் அந்த சிறுவன் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இந்நிலையில், நீதிமன்றம் அந்த சிறுவனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது. விபத்து ஏற்படுத்திய சில மணி நேரங்களில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். அவருக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளதாக அந்த சிறுவனின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிபந்தனைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து புனேவின் கல்யாணி நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது. விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன் மதுபோதையில் இருந்துள்ளார். பார்ட்டி முடித்து வீடு திரும்பிய போது காரை வேகமாக இயக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் காரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.