சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு சட்டரீதியாக தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி தெரிவித்தார்.
கோவையில், உடல்நலக் குறைவால் காலமான மாநகராட்சி முன்னாள் மேயரும், அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுமான தா.மலரவன் வீட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கேரள அரசு இடுக்கி மாவட்டம் பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
எனவே சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழத்துக்கு வரும் நீரை தடுக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் கரூர் காவிரி ஆற்றின் குறுக்கே ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டன. ஆனால், திமுக அரசு வந்தவுடன் புதிய தடுப்பணைகளை கட்டவில்லை. அதுமட்டுமில்லாது அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தடுப்பணை கட்டும் திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளது. பவானிசாகர் முதல் பவானி வரை ஆறு தடுப்பணைகள் கட்ட அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு தடுப்பணையை மட்டுமே கட்டி உள்ளனர். மீதமுள்ள தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர்.
கோவையில் அதிமுகவுக்கு வாக்களிக்கும் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை டபுள் என்ட்ரி என சொல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை கேலிக்குரியதாக உள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு சதவீதம் குறித்து அறிவிப்பதில் குளறுபடி ஏற்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது”என்றார்.
பேட்டியின் போது கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ-வான அம்மன் கே.அர்ச்சுணன், மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ-வான ஏ.கே. செல்வராஜ், கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.