புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழமையும் வரலாற்று சிறப்பும்மிக்கது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ சுவாமி திருக்கோவில். இந்தக் கோயிலின் வைகாசி திருவிழாவையொட்டி இன்று அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனைகள் நடைபெற்றன. கருடாழ்வார் ஓவியம் பொறித்த கொடியானது கோயில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
கொடியேற்றத்தின் போது ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வரதராஜ பெருமாள் வெங்கடாத்திரி கொண்டை அலங்காரத்தில் வைர வைடூரிய ஆபரணங்கள் அணிந்து வந்தார். அவர் கோயில் கொடிமரம் அருகே உள்ள தேசிகர் சந்நிதிக்கு அழைத்துவரப்பட்டார். இந்த நேரத்தில் வான வேடிக்கைகளும் நடைபெற்றன. கொடியேற்றம் முடிந்ததும் பெருமாள் தங்கச் சப்ரத்தில் வீதி உலா வந்தார். விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்க உள்ளார்.
வரும் 22 ஆம் தேதி முக்கிய நிகழ்வான கருட சேவையும், 26 ஆம் தேதி மகாரதம் எனப்படும் தேரோட்டமும் நடைபெறுகிறது. வரும் 28ஆம் தேதி தீர்த்தவாரியும் மறுநாள் 29ஆம் தேதி இரவு வெட்டிவேர் சப்பரத்தில் பெருமாள் வீதி உலா வரும் நிகழ்வோடும் வைகாசி திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.