ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய்ப்புகார் : பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

18.5 லட்சம் ரூபாய் கொள்ளை போன நிலையில், ரூபாய் 1.50 கோடி கொள்ளை போனதாக பொய்ப்புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இரு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த சொக்கம்பாளையம் பகுதி சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக பிரமுகரான இவர் அதே பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை காலை விஜயகுமார் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் பிற்பகலில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டினுள்ளே பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் அன்னூர் காவல் நிலையத்தில் திருடு போனது குறித்து புகார் அளித்தார். புகாரின் போது பணப்பெட்டியில் இருந்த ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். விசாரணையின் போது அன்னூர் பகுதிகளில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது வாலிபர் ஒருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த அந்த நபரை இன்று கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரது பெயர் அன்பரசன் என்பதும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு காவல்நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் 18.50 லட்சம் ரூபாய் மற்றும் 9 சவரன் நகைகள் மட்டுமே என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக விஜயகுமாரிடம் விசாரணை நடத்திய போது, வழக்கு விசாரணையை விரைவுப்படுத்துவதற்காக இவ்வாறு தவறான தகவல் அளித்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

திருட்டு சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி மற்றும் அவர்களுடன் இணைந்து செயல்பட்ட 10 தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட எஸ்பி-யான பத்திரிநாராயணன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.