பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : பெண் போலீஸாரை அவதூறாக பேசிய வழக்கில் உத்தரவு

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு செல்வதையொட்டி பெலிக்ஸுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெண் போலீஸாரை சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகாரின் பேரில், சங்கர் மீதும், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

டெல்லியில் இருந்த பெலிக்ஸை கைது செய்த திருச்சி தனிப்படை போலீஸார் மே 13-ம் தேதி திருச்சி அழைத்து வந்தனர். பின்னர், திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா முன்னிலை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மே 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், பெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, பெலிக்ஸ் ஜெரால்டுவை போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். அதன்படி, இன்று மாலை 3 மணி முதல் அவரை காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீஸார் விசாரணைக்கு பிறகு நாளை மாலை 3 மணிக்கு அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகின்றனர். போலீஸ் விசாரணைக்கு செல்வதையொட்டி பெலிக்ஸுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.