தூத்துக்குடியில் கனமழை – கொட்டும் மழையில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் கீதா ஜீவன் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்டு மழை நீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் உறுதி அளித்தார்.

தமிழகம் முழுவதும் 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்க கூடாது என பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இருப்பினும் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 5வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றவும் இந்த பகுதியில் நிரந்தரமாக மழை நீர் வடிகால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், இந்திரா நகர் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பலத்த மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல், இந்திரா நகர் பகுதியில் ஒவ்வொரு தெருவாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதிகளில் இருந்த மழை நீரை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், நிரந்தரமாக இந்த பகுதியில் வடிகால்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த பகுதி மக்களிடம் உறுதியளித்தார்‌.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த் சேகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருவதை அடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரசுத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.