உத்தரப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது

உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக்காபாத் எனும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்துவிட்டு அதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு, அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்திரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த மே 13 ஆம் தேதி நடந்த 4ஆம் கட்ட தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த இளைஞர் முகேஷ் ராஜ்புட் என்ற பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக 8 முறை வாக்களித்தார். அதை வீடியோவாகவும் பதிவு செய்திருந்தார்.

2.19 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். “ஒருவேளை இதனைத் தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால் நிச்சயமாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாஜக பூத் கமிட்டி ‘லூட்’ (சூறையாடும்) கமிட்டியாகத் தான் இருக்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவைக் கருத்தில் கொண்ட மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எக்ஸ் பக்கத்தில், அந்த வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், அகிலேஷ் யாதவ் ட்வீட் அடிப்படையில், ஃபரூக்காபாத் மக்களவை தேர்தல் உதவி அலுவர் நயாகாவோன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 1950, 1951, 1989 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 171F, 419 IPC, 128, 132, 136 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வீடியோக்களின் அடிப்படையில் ராஜன் சிங் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.