மழை தொடர்வதால் சதுரகிரி செல்ல அனுமதி ரத்து : வனத்துறை அறிவிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், சதுரகிரி செல்ல அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. வைகாசி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 24ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் பல பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பக்தர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நாட்களில் பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு மலையேறிச் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.