மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை : சாலைகளில் வெள்ளம்

மதுரையில் இன்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கன மழையால் நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்; தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதன்படி இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மற்றும் சில மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு ராஜாஜி மருத்துவமனை, கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் உள்பட மதுரை மாநகர் முழுவதுமே ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. கோரிப்பாளையம் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர்.

புதூரில் இருந்து ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையங்களுக்கு செல்லும் சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கருடர் பாலம் மழை நீரில் முழுவதுமாக மூழ்கியது. பாலத்தில் சுமார் 12 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளதால் இரு புறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்திற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரையில் பெய்த கனமழை கோடை வெயிலுக்கு ஆறுதல் அளித்தாலும், சாலையில் தேங்கிய வெள்ளம் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.