“இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் மோயில் இடிக்கப்பட மாட்டாது. நாங்கள் இடிப்பவர்கள் அல்ல; கட்டுபவர்கள்தான்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை உறுதிபட தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் பேரவை தலைவர் தாம்பரம் நாராயணன் உள்ளிட்டோர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, “தற்போது 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிந்துவிட்டதால் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அதிதீவிர வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். புல்டோசர் கதை எல்லாம் கூறுகிறார்கள்.
காங்கிரஸைப் பொருத்தவரை எல்லா மதமும் சம்மதம்தான். நானும் ராம பக்தன்தான். எப்படி ராமர் கோயிலை இடிக்க விடுவோம்? இந்திய தேசத்தை கட்டமைத்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். இடிப்பது காங்கிரஸ் வேலை அல்ல. நாங்கள் இடிப்பவர்கள் அல்ல; கட்டுபவர்கள்தான். மோடி மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மதிப்பதில்லை. அவர்களது பேச்சை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது.
தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். தோல்வி பயத்தில் கலவர அரசியல் செய்கின்றனர். பெண்கள் இலவச பேருந்து பயணத்தை மோடி குறைகூறுகிறார். இதிலிருந்து பாஜக பெண்களுக்கு எதிரானது என்பது தெரிகிறது. மெட்ரோ ரயிலிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். எங்கெல்லாம் நல்லாட்சி நடைபெறுகிறதோ அதெல்லாம் காமராஜர் ஆட்சிதான்”, என்று செல்வப்பெருந்தகை கூறினார்.