வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் – குவிந்த பக்தர்கள்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த 12 -ம் தேதி மாலை வரசித்தி விநாயகர் திருவீதி உலா நடந்தது. 13-ம்தேதி காலை 6 மணிக்கு துவஜ ரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து, வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகளும், சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடும், ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடந்தது. இதையடுத்து 17-ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 18-ம் தேதி யானை புறப்பாடும் நடைபெற்றது. இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

வடபழனி முருகன் கோயிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேரில் வள்ளி-தெய்வானையுடன் முருக பெருமான் எழுந்தருளினார். அதன்படி காலை 7 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. செண்டை மேளம், சிவ வாத்தியங்கள் முழங்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதிகளில் தேர் அசைந்தாடி வருவதை மனமுருக கண்டு அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா’ என்று பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர்.

கோயிலை சுற்றி மாட வீதிகளில் வலம் வந்த தேர் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவையொட்டி வடபழனி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கோயிலை சென்றடையும் அனைத்து சாலைகளிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்வதற்காக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று இரவு ஒய்யாளி உற்சவமும், 20-ம் தேதி குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ம் தேதி வடபழனி ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகமான 22-ம் தேதி காலை 9 மணிக்கு வள்ளி, தெய்வயானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது.

தொடர்ந்து, மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன. பின்னர், துவஜ அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் விழா நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் 24-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை தினமும் மாலை நடைபெறுகிறது. இதில் பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி, வீணை கச்சேரி, இசைச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற உள்ளன.