மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும் என்று உ.பி முதல்வர் பேசினார்.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘எங்களது எதிரிகள் எங்களைத் தாக்கினால், நாங்கள் ஒன்றும் தலைவணங்க மாட்டோம். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தக்கவைப்பது என்பது தற்போது பாகிஸ்தானுக்கு கடினமாகிவிட்டது. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரானது இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிவிடும். இதைச் செய்ய தைரியம் வேண்டும். மோடி நிச்சயம் செய்வார். கடந்தகால காங்கிரஸ் ஆட்சியின் போது, பாகிஸ்தானில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அதற்கு காங்கிரசிடம் கேட்டால், ‘பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவகிறார்கள்; நாங்கள் என்ன செய்ய முடியும்?’ என்று கூறினார்கள். ஆனால் இன்று பாகிஸ்தான் நம்மை தீய எண்ணத்துடன் பார்க்கக்கூடத் துணியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதன் விளைவுகள் என்னவாகும் என்பது தெரியும். வளர்ச்சிப் பாதையில் செல்லும் புதிய இந்தியா பிரதமர் மோடியால் கட்டமைக்கப்படும்’ என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.