புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் – கரையப்பட்டி சூராண்டார்கோயிலில் தமிழ்க்கல்வெட்டு மற்றும் அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் கரையப்பட்டியில் சூராண்டார்கோயில் உள்ளது. தற்போது வழிபாட்டில் இல்லாமல் புதர்மண்டி மண் மூடிய நிலையில் உள்ளன.

இக்கோயிலில் கல்வெட்டு ஆய்வாளர் க.கருணாகரன் களஆய்வு மேற்கொண்டார். அப்போது அக்கோயில் அதிஷ்டானத்தில் வெம்படை கட்டய கொல்லனுக்கு வடவாளம் ஊரார்கள் நிலம் கொடுத்த செய்தி பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு உள்ளதைக் கண்டுறிந்தார். மொத்தம் ஆறு வரிகள் உள்ள இக்கல்வெட்டின் எழுத்துக்கள் சிதைந்தும் முன்னும் பின்னுமாக மாறியும் உள்ளன. “ஜெயசிங்ககுலகாலவளநாட்டு தென்பனைங்காட்டு நாட்டு வடவாளம் ஊருக்கு வெம்படை கட்டய கொல்லனுக்கு பிடிபாடு பண்ணிக் குடுத்தபடி ஊர்காணி நஞ்சை புஞ்சை பெற்றுக் கொண்டு சந்திர சூரியன் உள்ளவரை அனுபவித்து கொள்ளவும், ஒற்றிவைத்துக் கொள்ளவும் அனுமதி கொடுத்துள்ளனர் என கல்வெட்டுச் செய்தி படிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கோயிலின் வெளிப்புறப்பகுதியில் புதைந்த நிலையில் ஒரே பலகைக் கல்லில் (உயரம்-40 செ.மீ, நீலம்-106 செ.மீ, தடிமன்-20 செ.மீ) வலது பக்கம் பூர்ணக்கலா (இடது கையில் மலர் வைத்துள்ளனர்) நடுவில் அமர்ந்த நிலையில் (உட்குடி ஆசணம்) அய்யனார் சிற்பம் வலது கையில் சாட்டை, ஜடாபாரம் (தலைமுடி),  இடது பக்கம் புஷ்க்கலா (வடது கையில் மலர் வைத்துள்ளனர்) இச்சிற்பம் சிதைந்த நிலையில் உள்ளது. இக்கோயிலில் உள்ள தமிழ்க் கல்வெட்டு மற்றும் அய்யனார் சிற்பத்தின் காலம் கி.பி 16 நூற்றாண்டாக இருக்கலாம் என அறியப்படுகிறது.